கொடைக்கானல்: கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றுக்கு போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, பலத்த காற்றுக்கு கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கொடைக்கானல் தெரசா நகர் பகுதியைச் சேர்ந்த தாஸ் (55), கொடைக்கானல் சின்னப்பள்ளம் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40) ஆகியோர் மீது சிக்னல் கம்பம் விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போக்குவரத்து சிக்னல் கம்பம் விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைபட்டது.