தமிழகம்

கோடைகாலத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு: ரூ.19.20 கோடி வருவாய் ஈட்டியது

மு.வேல்சங்கர்

சென்னை: நடப்பாண்டில் கோடைகாலத்தில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட 5 வந்தே பாரத் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ரயில்கள் மூலமாக, ரூ.19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நாட்டில் அதிவேகத்தில் இயங்கும் ரயிலாக வந்தே பாரத் ரயில்உள்ளது. தற்போது, நாடு முழுவதும் 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் -மைசூர், சென்னை சென்ட்ரல் -விஜயவாடா, சென்னை எழும்பூர் -திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்புவந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் கோடை காலத்தில் ஏப்ரல், மேஆகிய 2 மாதங்களில் சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மூலம், ரூ.19 கோடியே 20 லட்சத்து10 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

120 சதவீதம் டிக்கெட் பதிவு: சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் (20607) ஏப்ரல் மாதத்தில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் உள்ள 100 சதவீதம் இடங்களில் 120.41 சதவீதம் வரை டிக்கெட் பதிவாகி இருந்தது. அதாவது, 100 சதவீதம் இடங்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் நிலையில், மீதமுள்ள 20.41 சதவீதம், டிக்கெட்பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகை தவிர, மீதி தொகை திருப்பிஅளிக்கப்படும். இந்த ரயிலில் சேர்காரில் உள்ள இடங்களில் 122.64 சதவீதம் முன்பதிவாகியது. மே மாதத்தில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் உள்ள இடங்களில் 135.24 சதவீதமும், சேர்காரில் உள்ள இடங்களில் 130.04 சதவீதமும் முன்பதிவாகி இருந்தது.

ஏப்ரல், மே மாதங்களில் இந்த ரயில் சேவை மூலமாக ரூ.1 கோடி 69 லட்சத்து 55 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டது.

மறுமார்க்கமாக, மைசூர் -சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட ரயிலில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 28 ஆயிரமும், சென்னை - கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் (20643) மூலம் ரூ.92.75 லட்சமும், மறுமார்க்கமாக, கோயம்புத்தூர் - சென்னைக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 2 மாதங்களில் ரூ.79.04 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டது. இதுபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை - மைசூர் இடையே இயக்கப்பட்ட மற்றொரு வந்தே பாரத் ரயில்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் மூலமாக, 2 மாதங்களில் ரூ.19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. இதுதவிர, சில வழித்தடத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அந்த ரயில்களுக்கும் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. பயணிகளின் தேவை அதிகமாக உள்ள முக்கியவழித்தடங்களில் கூடுதல் வந்தேபாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

விரைவு ரயில் தேவை அதிகரிப்பு: கோடைகாலத்தில் நாள்தோறும்இயக்கப்பட்ட அனைத்து விரைவுரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள், கட்டணம் மிகுந்த வந்தே பாரத் ரயில்களில் பயணித்ததும் அதன் வருவாய் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்றும், எனவே, வழக்கமான ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT