தமிழகம்

மீன்வளம், மீனவர் நல துறை மறுசீரமைப்பு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மறுசீரமைப்பு செய்யப்படும் என மீன்வள துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் மீன்வள துறை மானியக் கோரிக்கை மீதானவிவாத்ததுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை மாவட்டம் பாரதியார் நகரில் மீன் இறங்கு தளம்மற்றும் திருவள்ளூர் மாவட்டம்பழவேற்காடு மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகள் ரூ.12 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவுடன் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாருதல் ஆகிய பணிகள் ரூ.30 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி கிராமத்தில் ரூ.25 கோடி செலவில் தூண்டில் வளைவு மற்றும் வலைபின்னும் கூடம் அமைக்கப்படும். கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ மகளிர் மாற்று வாழ்வாதார தொழிலாக கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்ள ரூ.39.88 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் ஏரப்புறக்கரை கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைத்தல் மற்றும் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மீன்களை தரமாகவும், சுகாதாரமான முறையிலும் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.

செயற்கைக்கோள் தொலைபேசி: ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்க மானியம் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீன் இறங்கு தளத்தை துறைமுகமாக மேம்படுத்திட ஆய்வுப் பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணங்கள் வாங்க ரூ.1 கோடி மானியமாக வழங்கப்படும். கைத்தூண்டில் மூலம் பிடிக்கப்படும் சூரை மீன்களுக்கு கூடுதல் விலை பெற்றிட, மீனவர், மீன் உற்பத்தியாளர் நிறுவன தொகுப்புகளை நிறுவுவதற்கான முன்னோடி திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மீனவ மகளிர், உலர் மீன் உற்பத்தியாளர்கள் குழுக்களின் தொகுப்புகள் மூலம் உயர் தொழில்நுட்ப சூரியஒளி பசுமை மீன் உலர் நிலையங்களை அமைக்க முன்னோடி திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

மண்ணெண்ணெய்யினால் இயக்கப்படும் வெளிப் பொருத்தும் இயந்திரங்களை திரவ எரிவாயு மூலம் இயக்கப்படும் இயந்திரங்களாக மாற்றும் பசுமை கடல் வளத் திட்டம் ரூ.2.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மறுசீரமைப்பு செய்யப்படும்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT