சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய பாஜகவினர் 650 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை (நேற்று) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, சேலம், தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. இருப்பினும் தடையை மீறி பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டத்தில் 3 இடங்களிலும், தி.நகர் அபிபுல்லா சாலையில் ஒரு இடத்திலும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உட்பட 600க்கும் மேற்பட்டோர் கைது செய்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அனுமதி இன்றி தடையை மீறி போராட்டம் நடத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி போராட்டம் நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக பாஜக நிர்வாகிகள் வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் உட்பட சுமார் 650 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.