தேர்தலுக்காக இரவு பகலாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக் கான ஊக்கத் தொகையை தராமல் இழுத்தடிக்கின்றனர். எங்களின் இந்தப் பிரச்சினையை எழுதுங்களேன் என்று `தி இந்து' உங்கள் குரலில் கேட்டுக்கொண்டார் அரசு அலுவலர் ஒருவர்.
இதுகுறித்து தேர்தல் பணி யில் ஈடுபட்ட அரசுத் துறை அலுவலர் கள் சிலர் கூறியதாவது: தேர்தலை நேரடியாக நடத்தும் பொறுப்பை யும், தேர்தல் தொடர்பான செலவினங்களை கவனித்துக் கொள்வதையும் வருவாய்த்துறை யினரே மேற்கொண்டதால், முக்கிய பொறுப்புகளையும் அந்த துறை யினரே எடுத்துக்கொண்டார்கள். இது தவிர, கடுமையான பணிகளை வேறு துறையினருக்கு அளித்திருந்தார்கள்.
அந்த வகையில் `ஸ்டேட்டிஸ்டிக் சர்வே', `பிளையிங் ஸ்குவாடு' என்ற இரண்டு பிரிவுகளில் தோட்டக் கலைத் துறை, வேளாண்மைத் துறை, பஞ்சாயத்து போர்டு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது பிளையிங் ஸ்குவாடு என்பது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை வாகனங்களில் சென்று பிடிப்பது. ஸ்டேட்டிஸ்டிக் சர்வே என்பது ஒரு இடத்தில் சோதனைச்சாவடி ஏற்படுத்தி அந்த வழியே செல்லும் வாகனங்கள் உள் ளிட்டவைகளை சோதனையிடுவது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 6 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு குழுவுக்கு மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர், ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு டிரைவர், ஒரு ஏட்டு, ஒரு கான்ஸ்டபிள், ஒரு ஆயுதப்படை போலீஸ்காரர் என்று இருந்தனர். இந்த முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 50 நாட்கள் இரவு பகலாக வேலை பார்த்தோம். இந்த தேர்தலில் 50 நாள் பணி என்பதால் சன்மானத் தொகை சீலிங் ரூ.25 ஆயிரம் என வைத்திருந்தனர். ஆனால், அந்தத் தொகை இதுவரை எங்களுக்கு வரவே இல்லை. கேட்டால் வருவாய்த் துறையினர் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
அதே சமயம் எங்களுக்கு வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு சென்ற மாதம் ஒரு தொகையை கணக்கிட்டு தந்துவிட்டார்கள். பலம் பொருந்திய யூனியன் அவர்களுடை யது என்பதுதான் அதற்கு காரணம்.. வருவாய்த் துறையினரும் தேர்தல் பணிகளுக்கான சன்மானத் தொகையை போட்டு எடுத்துக் கொண்டார்கள். மற்றவர்கள்தான் இதுநாள் வரையில் பணம் பெறாமல் இருக்கிறோம். ஒரு குழுவுக்கு 6 பேர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 6 குழுக்கள். மொத்தம் தமிழ்நாட்டில் 234 தொகுதிகள். எத்தனை பேர் இந்தத் தொகை கிடைக்காமல் இருப்பார்கள் என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டபோது, ’தேர்தல் கமிஷனுக்கு எழுதியிருக்கிறோம். அவர்கள் அனுமதித்தால்தான் நாங்கள் தொகை கொடுக்க முடியும்’ என்றார்.