திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர் | படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்த சம்பவம்: சேகர்பாபு ராஜினாமா செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்

துரை விஜயராஜ்

சென்னை: நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் 21-ம் தேதி காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர், ஆளுங்கட்சி பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க தொடங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்தது. தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லையப்பர் கோயில் தேர் வடம் 20 ஆண்டுகள் பழமையானதாகும்.

இதனை மாற்ற சொல்லி பக்தர்களும், சிவனடியார்களும், இந்து முன்னணியும் பல வருடங்களாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் கோயில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளதே இந்த சம்பவத்துக்கு காரணம். நடந்த சம்பவத்தை பார்க்கும்போது மாவட்ட நிர்வாகம் இதில் மிகப்பெரிய கவனக்குறைவோடு செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. பொதுமக்களிடமோ, பக்தர்களிடமோ, இந்து அமைப்புகளிடமோ எந்த கருத்துக்களையும் அரசு கேட்பதில்லை.அதன் விளைவே நெல்லையப்பர் தேரோட்டத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோயில் உண்டியல், வாடகை, குத்தகை, கட்டண தரிசன கட்டணம் என கோயிலிலிருந்து வருமானத்தை, பணத்தை கொண்டு செல்வதில் தான் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முனைப்பாக உள்ளதே தவிர, கோயிலுக்குரிய எந்த வசதிகளும் பராமரிப்பு பணிகளும் செய்யாமல் அலட்சியப்படுத்துகிறது. எனவே, இந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், அலட்சியமாக செயல்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT