தமிழகம்

துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கள்ளச் சாராயம் விற்பனை - கள்ளக்குறிச்சி அவலம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 19-ம் தேதி காலை 6 மணியளவில் பிரவீன், சுரேஷ் ஆகியோர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த தகவல் முதலில் வெளிவந்தது.

ஆனால், அவர்கள் கள்ளச் சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை அறியாமல், அவரது உறவினர்களும், நண்பர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர்.

துக்க வீட்டுக்கு வந்த அவர்கள், அப்பகுதியில் உள்ள சுரேஷ்- வடிவுக்கரசி தம்பதியிடம் கள்ளச் சாராயம் வாங்கி அருந்தி விட்டுச் சென்றுள்ளனர்.

இதேபோல வேறு சிலரும் சுரேஷ்-வடிவுக்கரசியிடம் கள்ளச் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர். இதைத் தொடர்ந்தே கள்ளச் சாராய உயிரிழப்புகள் நடந்துள்ளன.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிலரிடம் விசாரித்தபோது, இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பையா என்பவர் கூறும்போது, “நானும் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றேன். மூட்டைக்காரர் என்பவர் கள்ளச் சாராயம் வாங்கித் தந்தார். அதைக் குடித்தேன். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். ஏற்கெனவே உயிரிழந்த பிரவீன், சுரேஷ் ஆகியோர் கள்ளச் சாராயம் குடித்ததால்தான் இறந்தார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்றார்.

SCROLL FOR NEXT