கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:
ஊட்டச்சத்துகள் உள்ளன: தமிழக அரசு மது விலக்கை நோக்கிச் செல்லாமல், மதுவை நோக்கிச் செல்கிறது. கள்ளில் 4.5 சதவீதம்தான் ஆல்கஹால் உள்ளது. ஆனால்,மது வகைகளில் 42.8 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன.
கள், மது, போதைப் பொருள்மூன்றும் வெவ்வேறானவை.கள் என்பது உணவு. மது, உணவு மற்றும் போதைப் பொருட் களுக்கான வேறுபாடு தெரியாததால்தான் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்த உரிமை. அந்த உரிமையை தமிழக அரசு பறித்துக் கொண்டது.
கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் கள் விற்கப்படுகிறது. இதனால், அங்கு கலப்படங்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத் தில் மட்டும் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
மதிப்பு கூட்டப்பட்ட பண்டங்கள்: கள்ளச் சாராயம் குடித்துஉயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கி, அரசே கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், நாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி கள் இறக்குகிறோம். எங்கள் மீது மதுவிலக்கு சட்டப்படி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பனை, தென்னை மரங்களில் இருந்து கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கி குடித்தும், விற்றும் கொள்ளலாம். அதைமதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி, வியாபாரம் செய்யலாம் என்ற அறிவிப்பைஅரசு வெளியிட வேண்டும்.கள்ளுக்கான தடையை நீக்கினால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக் கும். ஏற்றுமதி மூலம் வருவாயும் கிடைக்கும். கள் இறக்குதலுக்கான தடையை நீக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
10 லட்சம் குடும்பங்கள் பயன்: கள்ளச் சாராயத்தில் நடக்கும் உயிரிழப்புகள் போன்று, கள்ளில் உயிரிழப்பு இருக்காது. கள் இறக்க தடையை நீக்கினால், பனை, தென்னைவிவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். கள் அருந்தினால் போதை வரும். ஆனால், உடல்நல பாதிப்பு வராது.
அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து கள்ளுக்கான தடையை நீக்கினால் 10 லட்சம் பனை, தென்னை தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் பயனடைவர். இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார்.