சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பட்டியல் இனத்தவர்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ச.வடிவேல் ராவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதற்காக பட்டியலினத்தவர்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே பகைமையைதீட்டி குளிர்காயும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு சமூகத்தினரும் இணைந்தால் சமூக முன்னேற்றத்தில் சாதனை நிகழ்த்தலாம். அது நடக்கக் கூடாது என்பதற்காகவே சமூகத்தினரை பிரித்து வைத்திருக்கின்றனர். இந்த சதியை முறியடித்து, உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து மக்களிடையே புரிதல் இல்லை. இரு சமூகத்தினரும் முன்னேற வேண்டும் என்பதே அவரது எண்ணம். பட்டியலினத்தவருக்கு அதிகாரமும், அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்பதற்காக அவர் அளவுக்கு, வேறு எந்தத் தலைவரும் உழைத்ததில்லை. 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது, பட்டியலினத்தவருக்கு 22 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். பாமக கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக அம்பேத்கரை ஏற்றுக் கொண்டார்.
இதற்காக விசிக தலைவர் திருமாவளனும் பாராட்டினார். தைலாபுரத்தில் அம்பேத்கர் சிலை அமைத்து, அதை திருமாவளவனைக் கொண்டு திறக்கச் செய்தார்.
பாமக தொடங்கப்பட்டது முதல் பொதுச்செயலாளர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேறு எந்தக் கட்சியிலும் இந்த நிலை இல்லை. பாமகவுக்கு கிடைத்த மத்திய அமைச்சர் பதவிகளை பட்டியலினத்தவருக்கு வழங்கினார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் மருத்துவ கல்வியில் அகில இந்திய அளவில் பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் 17 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி பிரிவினர் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. பட்டியலினத்தவர் உடலை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினர் தடை சொன்னபோது, உடலை தோளில் சுமந்து சென்றவர் ராமதாஸ். இதற்காக தமிழ்க்குடிதாங்கி என்னும் பட்டத்தை அவருக்கு திருமாவளவன் வழங்கினார்.
தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்காக ராமதாஸை தவிர வேறு எந்தத் தலைவராவது இந்தளவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? பட்டியலின சகோதர, சகோதரிகள் சிந்திக்க வேண்டும். பிளவு ஏற்படுத்துவோரை ஒதுக்கிவிட்டு, பாமகவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை இணைந்து கைப்பற்றுவதற்கான மறு பயணத்தின் தொடக்கப்புள்ளியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும்.
அனைத்து தரப்பு மக்களின்நன்மைக்காக பட்டியல் இனத்தவர்களும், பிற சமூகத்தினரும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.