சென்னை: உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், உணவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: கே.எம்.எஸ்.2023–24-ம் கொள்முதல் பருவத்துக்கான நெல்லை தடங்கலின்றி விவசாயிகளிடம் இருந்து விரைவில் கொள்முதல் செய்து அதற்கான ஊக்கத்தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். நெல்லை அரவை ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசி நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். கிடங்குகளில் போதுமான அளவு பச்சை, புழுங்கல் அரிசி இருப்பு வைக்க வேண்டும்.
நவீன அரிசி அரவை ஆலைகளில் அரைக்கப்படும் அரிசியில் கருப்பு மற்றும் பழுப்பு நீக்கம் செய்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் மூலம் தரத்தை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டு வரும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு இருப்பு அளவை கேட்டறிந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வு செய்து துரிதமாக வழங்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில், துறை செயலர் கே.கோபால், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.