திடீர் சூறாவளி மழையால் பலத்த நஷ்டமடைந்த திருச்சி, கரூர் வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக வாழை ஒன்றுக்கு ரூ.350 இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு விவசாய காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை சாகுபடி செய்வது தமிழகத்தில் தான். குறிப்பாக திருச்சி, கரூர், தேனி மாவட்டங்கள் தான் அதிகமாக சாகுபடி செய்கின்றன.
காவித் தண்ணீரையே நம்பி இருக்கும் திருச்சி, கரூர், மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் ஆழ்துளை கிணறு தண்ணீர் மூலம் தான் மிக சிரமமான சூழ்நிலையில் சாகுடி செய்கின்றன. 10 லட்சம் வாழை சாகுபடி செய்யும் இடத்தில் இப்பொழுது இரண்டு லட்சம் வாழைதான் சாகுபடி செய்ய முடிகிறது.
மிகவும் சிரமத்திற்கிடையில் சாகுபடி செய்துகொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் இன்னும் 15 முதல் 20 தினங்களுக்குள் அறுவடை செய்ய உள்ள நிலையில், சென்ற வாரம் மே 2, 3-ஆம் தேதியில் திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளி காற்று வீசி ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள், வாழைதாருடன் முறிந்து விழுந்து மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கரில் 1,000 வாழைகள் பயிரிடப்படுகிறது. இதற்கான உற்பத்தி செலவு 3 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை செலவாகிறது. ஆகவே தமிழக அரசு உடனடியாக சேதப்பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளின் பாதிப்பை கணிக்கிட்டு வாழை ஒன்றுக்கு ரூ.350 இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு விவசாய காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும்.
திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முறையான ஆராய்ச்சி செய்து வாழை உற்பத்தி, நோய், இயற்கை சீற்றங்களால் மழை மற்றும் சூறாவளி காற்றிலிருந்து எவ்வாறு காப்பது போன்ற செயல்திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி, இதுபோன்ற இழப்பு இனிமேல் ஏற்படாமல் காக்க வேண்டும்.
தோட்டக்கலை மற்றும் வருவாய்துறை இதில் அதிக கவனம் செலுத்தி முறையான பாதிப்புகளை கண்டறிந்து, அதற்கான இழப்பீட்டு அறிக்கையை தாமதம் இல்லாமல் தமிழக அரசிடம் அளித்து, அதற்கான இழப்பீடை போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.