கோப்புப் படம் 
தமிழகம்

பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணி இன்று தொடக்கம்: காணொலியில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 18) தொடங்கி வைக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சங்க கால வரலாற்று சின்னங்களைக் கொண்ட பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் கோட்டை சுவர், அரண்
மனை திடல் போன்ற இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரை முதற்கட்ட அகழாய்வு நடைபெற்றது. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைக்கப்பெற்ற தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி, பாசி மணி, பல விதமான பானை ஓடுகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் குறித்த விரிவான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், 2-ம் கட்ட அகழாய்வு பணிக்கும் அனுமதி கோரப்பட்டது.

அரசு அனுமதி: மேலும், அகழாய்வு பணிக்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2-ம் கட்ட அகழாய்வு பணிக்கு அரசு அனுமதி அளித்தது. அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று (ஜூன் 18) தொடங்கி வைக்கிறார்.

பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

SCROLL FOR NEXT