குவைத்தில் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி நவல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த ராஜுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
தமிழகம்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

அ.சாதிக் பாட்சா

திருச்சி: குவைத் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி நவல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த ராஜுவின் குடும்பத்தினரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த ராஜு (54) என்பவரும் ஒருவர். ராஜு உடல் குவைத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் கொச்சி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த தகவலை அறிந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ராஜுவின் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் சி. கங்காதரன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், திமுக நிர்வாகி தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT