காவிரியில் தண்ணீர் பெற்றுத் தரக் கோரி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று பேரணி நடத்திய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர். 
தமிழகம்

காவிரி உபரிநீரை சேமிக்கும் வகையில் ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும்: காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தருமபுரி/நாகை: காவிரி உபரிநீரை சேமிக்கும் வகையில் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்றுதமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற வேண்டும், மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைநோக்கி ‘விவசாயிகள் நீதி கேட்டுப் பேரணி’ நடத்தப்பட்டது. இதில் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒகேனக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ராசிமணல் பகுதியில் அணைகட்டினால், கனமழைக் காலங்களில் காவிரியில் வெளியேறும் உபரிநீரை சேமிக்கலாம். எனவே, ராசிமணல் பகுதியில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகேதாட்டு அருகே ஆறுபெல்லி என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணையைக் கட்டியுள்ளது.

இதில் மழைக் காலங்களில் மழை நீரும், இதர காலங்களில் பெங்களூரு நகரின் கழிவுநீரும் சேமிக்கப்படுகிறது. இந்த கழிவுநீர் காவிரியில் கலந்து வரும்போது, பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

கதவணைக்கு அஞ்சலி: மேட்டூர் அணையில் தற்போது போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ம்தேதியான நேற்று டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கவலை அடைந்துள்ள நாகை மாவட்ட விவசாயிகள், தேவூரை அடுத்துள்ள ஆத்தூர் பாசன வாய்க்கால் கதவணைக்கு நேற்று மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏற்றி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும், மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் தமிழக அரசு பேசி, குறுவை சாகுபடிக்கு தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரமிக்க ஆணையமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT