மேட்டூர்: மேட்டூர் அணை வரலாற்றில் 61-வதுமுறையாக டெல்டா பகுதிகளின் குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரைக் கொண்டு திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர்உள்ளிட்ட 12 மாவட்டங்களில், 16.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வழக்கமாக, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம்தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 12-ம் தேதிக்கு முன்பாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு இன்று தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், அணையில் 43.71 அடி நீர் மட்டுமே உள்ளது.மேலும், தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்தால்தான், 90 நாட்களுக்காவது தொடர்ந்து பாசனத்துக்கு நீர் வழங்க முடியும். ஆனால், அணையில் 14.08 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
எனவே, நடப்பாண்டு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 91 ஆண்டுகால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்காமல் இருப்பது 61-வது முறையாகும்.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, கடந்த ஆண்டுபோல நடப்பாண்டும் தென்மேற்குப் பருவமழை கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. பருவமழை பெய்து, மேட்டூர் அணைக்குநீர்வரத்து அதிகரித்தால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.