கிருஷ்ணகிரி அணையில், ஆய்வு மேற்கொண்ட மத்திய நதி நீர் ஆணையக் குழுவினர். 
தமிழகம்

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக கிருஷ்ணகிரியில் மத்திய நதி நீர் ஆணையக்குழு ஆய்வு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மத்திய நதி நீர் ஆணையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ளநந்தி மலையில் (நந்தி துர்க்கம்)தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி 432 கிமீ தூரம் பயணிக்கிறது. இதில், கர்நாடக மாநிலத்தில் 112 கிமீ தொலைவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் 180 கிமீ தொலைவும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் 34 கிமீ தொலைவும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 106 கிமீ தொலைவுபயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

நீர்வரத்து அளவீடு: தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளாக சின்னாறு, மார்க்கண்டேயன் நதி, பாம்பாறு, வன்னியாறு, கொடியாளம் ஆகிய ஆறுகள் உள்ளன.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக, நேற்று முன்தினம் மத்திய நதி நீர் ஆணையத் தலைவர் குஷ்விந்தர்வோரா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி அருகேகும்மனூரில் மத்திய நதி நீர் ஆணையத்தின் நீர்வரத்து அளவீடு அலுவலகம் உள்ளது இவ்அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் செல்லும் உபரி நீரின் அளவு, வறட்சி காலங்களில் செல்லும் நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை மத்திய நதிநீர் ஆணையக் குழுவினர் கேட்டறிந்தனர்.

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான, மார்க்கண்டேயன் நதி குறுக்கே கர்நாடகமாநிலத்தில் கட்டப்பட்டுள்ள யார்கோல் அணை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரலப்பள்ளி, மாரசந்திரம் தடுப்பணைகளை குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் கிருஷ்ணகிரி அணையிலும் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக நீர்வளத் துறை அலுவலர்கள் கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா மற்றும் தமிழக தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மத்திய நதி நீர் ஆணையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளில் மேற்கொள்ளப்படும் பாசன பரப்பு, ஆயக்கட்டுகள், நெல் சாகுபடி பரப்பளவு, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் விவரங்கள், அதன் மூலம் பயன்பெறும் பாசன நிலங்கள், கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT