கோப்புப்படம் 
தமிழகம்

குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்க தொடர் முயற்சி

ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை வனப்பகுதியில் தாய் யானை ஏற்றுக் கொள்ளாமல் தனித்துவிடப்பட்ட குட்டியை, யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் தரையில் படுத்து கிடந்த 40 வயது பெண் யானைக்கு, 5 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1-ம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து, வனப்பகுதிக்குள் சென்றது.

பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த 3-ம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தாய் யானை, குட்டியை ஏற்காத நிலையில், மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முதல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “குட்டி யானையை முகாமுக்கு கொண்டு செல்வது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் முடிவு எடுப்பார். அதன் பிறகு முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க விடப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT