குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக ஆய்வு 
தமிழகம்

திருப்பூரில் மேலும் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை: மாநகராட்சி

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பனியன் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, மாநகராட்சி பகுதிகளில் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கானவர்கள் மாநகராட்சி பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் பலர் வெளிமாநிலம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்துகொண்டே இருப்பதால் நாளுக்கு நாள் மாநகர் பகுதிகளில் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளும் நிர்வாக வசதிக்காக 15 வார்டுகள் வீதமாக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரை பொறுத்தவரை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதால் குடிநீர் தேவையும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி 4-வது குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதற்கான பணிகளை நேற்று (வெள்ளிகிழமை) ஆய்வு செய்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தொழிலாளர்களின் தற்போதைய எண்ணிக்கை மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் என்னென்ன தேவையோ அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை பெருமளவு தடுத்துள்ளோம். மாநகராட்சி பகுதியில் 2 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் திட்டம் மூலம் 50 எம்.எல்.டி., 3-வது குடிநீர் திட்டம் மூலம் 90 எம்.எல்.டி, 2-வது குடிநீர் திட்டம் மூலம் 20 எம்.எல்.டி. என நாள் ஒன்றுக்கு 160 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதலாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட பகுதிகளும் இதில் அடங்கும். 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் குழாய்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT