மாணவர்கள் | கோப்புப் படம் 
தமிழகம்

இணையவழி, தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அவகாசம்

சி.பிரதாப்

சென்னை: திறந்தநிலை, இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஜி வெளியிட்ட அறிவிப்பு விவரம்; நடப்பு கல்வியாண்டில் (2024-25) செப்டம்பர் பருவத்தின் சேர்க்கைக்கான தொலைதூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப் பதிவுக்கு ஜூன் 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ எனும் வலைத்தளம் வழியாக ஜூன் 15-ம் தேதிக்குள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பின்னர் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சேர்த்து ஜூன் 30-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடர்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT