தமிழகம்

தமிழக பாஜக நிர்வாகிகள் விரைவில் நியமனம்?: அமித் ஷா ஒப்புதலுக்கு பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது

செய்திப்பிரிவு

பாஜக தமிழக நிர்வாகிகளை நியமனம் செய்வதற்காக 25 பேர் அடங்கிய பெயர் பட்டியல் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக தமிழகத் தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சரானதால், தமிழிசை சவுந்திரராஜன் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப் பட்டார். தற்போது, கட்சியின் பிற நிர்வாகிகளை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கட்சித் தலைவராக பொறுப் பேற்றபோது, கட்சியின் தேசியக் குழுவைப் போன்றே மாநிலத்திலும் அனுபவசாலிகள், இளை ஞர்கள், பெண்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்படுவர் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருந்தார்.

அதன்படி, ஜனசங்க காலத்தில் இருந்து கட்சியில் பணியாற்றியவர்கள், கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்கள், ராமஜென்ம பூமி கரசேவையில் பங்கேற்றவர்கள் என கட்சியின் மாநில நிர்வாகிகளாக நியமனம் செய்வதற்காக 25 பேர் கொண்ட பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த மாநில நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இந்த பெயர் பட்டிலை தயாரித்து அனுப்பியுள்ளனர். தஞ்சை எம்.எஸ்.ராமலிங்கம், நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, வழக்கறிஞர் விக்டோரியா கவுரி, சென்னை சி.எஸ்.சி.வடிவேலு, காஞ்சிபுரம் எம்.வி.சம்பத், வழக்கறிஞர் கே.டி.ராகவன், ராமநாதபுரம் சுப. நாகராஜன், மதுரை எம்.ராஜரத்தினம், பொன் கருணாநிதி, திண்டுக்கல் திருமலைச்சாமி, நெல்லை பாண்டித்துரை, கிருஷ்ணகிரி முனைவரி பேகம், நாமக்கல் தமிழரசி யோகம், கோவை எஸ்.ஆர்.சேகர், ஜி.கே. செல்வகுமார், சேலம் சிவராமன், திருச்சி சுப்பிரமணியன், இல. கண்ணன், ஓசூர் பாலகிருஷ்ணன், கடலூர் எஸ்.வி. தரன், சிவகங்கை வழக்கறிஞர் சொக்கலிங்கம், திருவள்ளூர் எம். பாஸ்கரன், ஈரோடு சரவணன், விழுப்புரம் ஏ.ஜி. காந்தி, தென்சென்னை டால்பின் தரன் ஆகியோரது பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓரிரு வாரங்களில் பாஜக தமிழக மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்று அந்தக் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT