நாகர்கோவில்: கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்னும் 6 நாட்களில் முடிவதையொட்டி மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் வர்ணம் பூசுதல், பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ல் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என்பதால், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் வலைகளை சீர் செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தற்போது தடை காலம் இன்னும் 6 நாட்களில் முடிவதையொட்டி மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் வர்ணம் பூசுதல், என்ஜின்களை பழுது பார்தல், வலைகளை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு மீன் பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் சின்னமுட்டம் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மீன்பிடி துறைமுகத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநரிடம் திட்ட வரைவு தயாரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 52 நிரந்தர விசைப்படகுகள் வைப்பதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளதோடு, 320 படகுகள் வைப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் அருகில் விசைப்படகுகள் கட்டப்பட்டு வரும் பணியினையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னக்குப்பன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.