சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் குடிநீர் தொட்டி 
தமிழகம்

குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட வழக்கு: சிபிசிஐடி கூடுதல் விசாரணை அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கூடுதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏப்ரல் 25-ல் மாட்டு சாணம் கலக்கப்பட்டது. இந்த நீரை பருகிய பலரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரட்டை குவளை முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொழிஞ்சியம்மன் மஹால் மற்றும் எம்ஆர்பி திருமண மண்டபங்களில் ஆதிதிராவிட வகுப்பினர் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

எனவே, புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும், கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், இரட்டை குவளை முறையை தடுக்கவும், ஆதிதிராவிட வகுப்பினர்களின் விழாக்கள் நடத்த திருமண மண்டபங்களை வாடகைக்கு விடவும், நீர்நிலைகளில் குளிக்க அனுமதி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி டிஎஸ்பி தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு நீதிபதிகள், சம்பவம் தொடர்பான புதிய புகார்களை காவல் நிலையத்தில் மட்டுமே வழங்க வேண்டும். சிபிசிஐடி போலீஸார் புகாரை முறையாக விசாரிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது கூடுதல் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT