பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை போட்டுக்கொண்ட பாஜக நிர்வாகி ஜெயசங்கர். 
தமிழகம்

அண்ணாமலை தோற்றதால் மொட்டை போட்டு பஜாரில் சுற்றி வந்த பாஜக நிர்வாகி!

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் திருச்செந்தூர் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் மொட்டையடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் பாஜகவின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ளார்.

இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார். அப்படி அவர் வெற்றி பெறாவிட்டால் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை போட்டு கொண்டார். பின்னர் ரவுண்டானாவை சுற்றி வந்துள்ளார். இதனை அங்கு திரண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT