தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகளில் மீண்டும் திமுகவுக்கு வெற்றியை பரிசளித்த தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பாக கூட்டம் நடத்தப்படும் என வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 39 தொகுதிகளையும் கைப்பற்றி சாதித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி 40/40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் தங்களுக்கு வெற்றியை வசமாக்கி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்த காஞ்சி வடக்கு திமுக முடிவு செய்துள்ளது. காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற உள்ள இந்தக் கூட்டங்களில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று பேசுவார்கள் என தெரிகிறது.
இது குறித்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா. மோ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகளில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி. ஆலந்தூர் தொகுதியில் 12-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 13-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும், தாம்பரம் தொகுதியில் 18-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கரனும் உரையாற்றுகிறார்கள்.
அதேபோல் திருப்போரூர் தொகுதியில் 19-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.மெய்யநாதனும் 20-ம் தேதி பல்லாவரம் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
எனவே இந்த ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களை அந்தந்த பகுதி ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர் இணைந்து நடத்த வேண்டும் என்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் போது பொதுக்கூட்ட மேடையிலேயே ஏழை. எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.