தமிழகம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சி இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சி இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் திருவள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா(45).

இவர் சொந்த வேலை காரணமாக, திருவாரூருக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயிலில் கடந்த 28-ம் தேதி இரவு புறப்பட்டார். இவர், ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்தார். ரயில் புறப்பட்ட சில மணி நேரத்தில் தனது பெர்த்தில் அவர் படுத்து தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தபோது, அவர் எழுந்து தனது பையைத் தேடியபோது, அது மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி வழக்குப் பதிந்தார். இதைப்போல, 2 புகார்கள் எழும்பூர் ரயில்வே போலீஸில் ஏற்கெனவே பதிவாகி இருந்தன.

இதையடுத்து, குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் முதலில் ஒவ்வொரு ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒருநபர் பையை எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிச் செல்வது தெரியவந்தது. அந்த நபரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரை எழும்பூர் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அந்த நபர் திருச்சி மாவட்டம் தயானூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்(28) என்பதும், ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பைகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

அவரிடமிருந்து இதுவரை 5 பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.3 லட்சம் ரொக்கம், 5.5 பவுன் எடை கொண்ட 2 தங்க நகைகள், 2 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT