சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் அனைவருக்கும் பொதுவான இடத்தை சட்டவிரோதமாக வணிக நோக்கில் ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக நடிகர் தனுஷின் தாயார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி மற்றும் குடியிருப்பாளர்களான நுஷ்ரத் அபிதா, ஜாபர் ஆயிஷா பீவி, திருநாவுக்கரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ரேடியன்ஸ் மீடியா நிறுவன இயக்குநரான நடிகர் சரத்குமார், சுதா, ஜானகிராமன், தெய்வசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்திருந்தனர்.
அந்த மனுவில், அனைவருக்கும் பொதுவான அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளியில் உள்ள மேல்தளத்தை சில குடியிருப்பு வாசிகள் தடுத்து வருகின்றனர். அதேபோல தரைத்தளத்தில் உள்ள பொதுவான பகுதியை நடிகர் சரத்குமார் தனது நிறுவனத்துக்காக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும்இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்்படவில்லை என அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமித்து பயன்படுத்துவதை தடுக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.