தமிழகம்

கிடைத்த தீப்பெட்டியை வைத்து மீண்டும் ஒளி பெற்ற மதிமுக

செய்திப்பிரிவு

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தீப்பெட்டி சின்னத்தை வைத்து மீண்டும் ஒளி பெற்றுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதிமுக, தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

ஆனால், இம்முறை தனி சின்னத்தில்தான் போட்டி என மதிமுக தெரிவித்துவிட்டது. அதன்பின், பம்பரம் சின்னத்துக்காக தேர்தல் ஆணையம் முதல் நீதிமன்றம் வரை சென்று போராடியது. பம்பரம் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், திருச்சி தொகுதியில் களமிறக்கப்பட்ட வைகோவின் மகன் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.

துரை வைகோவுக்கு ஆதரவாக திமுகவினரும் பிரச்சாரத்தில் பக்கபலமாக உடன் நின்றனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்படாது என தொடக்கம் முதலே கூறி வந்தார் துரை வைகோ. அதற்கேற்ப 3.13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தீப்பெட்டி மூலம் ஒளி பெற்ற மதிமுக, பிரகாசமாக மீண்டும் ஒளிரும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT