புதுச்சேரி: மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர், எம்எல்ஏக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவை வளாகத்தில் கருணாநிதி படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார் அவரைத்தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், பாஸ்கர், எதிர்க்கட்சித்தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில், அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி மாநில திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏஎப்டி திடலில் ஒன்றிணைந்து கொடியேந்தி அங்கிருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் மாநில கழகம் சார்பில் அமைப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல், புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி சார்பில் கருணாநிதி உருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.