குடியாத்தம்: "தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் மூன்று, நான்கு கொலைகள் நடந்துள்ளன. இதுதான் திராவிட மாடல் ஆட்சி" என தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தந்தையான குமரி அனந்தனை நேரில் சந்தித்து ஆசிபெற ரயில் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காட்பாடிக்கு வந்தார்.
அவரை வேலூர் மாவட்ட பாஜகவினர் வரவேற்றனர். தனது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு இருந்தவர்களுக்கு தமிழிசை சவுந்திரராஜன் இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து, காட்பாடியில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது, ‘‘தேர்தலுக்கு பின் வந்த கருத்துக்கணிப்பில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நல்ல திட்டங்களை நாட்டுக்கு கொடுத்ததற்காக மக்கள் நன்றி தெரிவித்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். தற்பொழுது திராவிட மாடல் எந்த அளவிற்கு தோல்வி அடைந்துள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது. வேங்கை வயல் பிரச்சினைக்கு இத்தனை நாட்கள் ஆகியும் தீர்வு கிடைக்கவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் மூன்று, நான்கு கொலைகள் நடந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. இவ்வளவு தோல்விகளை வைத்துக்கொண்டு திமுக ஆட்சி நடத்துகிறது. தமிழகத்தில் மின்சாரம், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும், பத்திரப்பதிவு கட்டணமும் உயர்ந்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள மக்கள் வளர்ச்சியை நோக்கி, ஊழலை எதிர்த்து, வாக்களித்திருப்பது போல தமிழகத்திலும் மக்கள் இது போன்ற புரட்சியை ஏற்படுத்த வேண்டும். திமுக அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்கள் வருங்காலத்தில் இதை உணர வேண்டும். ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் நாட்டின் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பாஜகவிற்கு வாக்களித்தோம் என மக்களே கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிக அளவில் வெற்றி பெறுவோம் என கனவு காண்கிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது. தமிழகத்தில் கருத்து கணிப்புகளை விட அதிக அளவில் பாஜக வெற்றி பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் பாஜகவை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்பது இந்த தேர்தல் மூலம் தெரிகிறது. ஒரு தேசியக் கட்சிக்கு தமிழகத்தில் இப்படி ஒரு வரவேற்பு இருப்பது வரவேற்கத்தக்கது. இது ஆரம்ப கட்டம் தான்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியது. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பிரதமர் தியானம் செய்யலாம் யாரும் தடுக்க முடியாது. கன்னியாகுமரி ஒரு தியாக பூமி. அது பார்வதி மாதா தவம் செய்த இடம். விவேகானந்தர் தவம் செய்த இடமாகும். இப்படிப்பட்ட ஆன்மீக இடமாக கன்னியாகுமரி விளங்குகிறது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல தான் மோடி அங்கு தியானம் மேற்கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரதமர் அங்கு தியானம் செய்ததால் அதன் முக்கியத்துவம் அதிகமாகியிருக்கிறது.
தமிழகத்தில் இப்படி ஒரு ஆன்மிக இடம் உள்ளது என்பதை உலகத்திற்கு பிரதமர் எடுத்துக் கூறியுள்ளார். திருவள்ளுவர் சிலைக்கும் சென்று அங்கும் மரியாதை செலுத்தி விட்டு தமிழ் மீதுள்ள பற்றையும் உணர்த்திவிட்டு தான் பிரதமர் வந்துள்ளார். பிரதமர் மோடி பிற நாடுகளுக்குச் செல்லும் போது மகாத்மா காந்தியின் சிலையை பல்வேறு இடங்களில் திறந்து வைத்துள்ளார். காந்தி சிலைக்கு மலர் தூவிய பிறகு தான் அலுவலக பணியையே துவங்குகிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது. பாரத பிரதமர் எதை சொன்னாலும் அதை திரித்து கூறுகிறார்கள்.
திமுக கட்சி இப்போது தான் தேசியக் கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளார்கள். காந்தி மீது அவர்களுக்கு எந்த அளவு பாசம் தற்போது ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். முரசொலியில் காந்தி பற்றி தலையங்கம் எழுதுகின்ற அளவிற்கு தேசிய பற்றாளர்களாக மாறி இருப்பது பிரதமர் மோடியால் திமுகவினர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்கிற போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
என்னுடைய வாழ்க்கை முழுவதும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துள்ளேன். மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். அதற்காக தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். அதிக அளவில் படித்தவர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அனைவரும் பொதுவாழ்க்கைக்கு வந்தால் தான் அரசியல் தூய்மைப்படுத்தப்படும். பொது வாழ்க்கை என்பது மக்களுக்காக இல்லாமல் தனக்காகவும் தனது குடும்பத்துக்காகவும் தான் என்ற நிலை தற்போது மாறி வருகிறது.
தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்கிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே ஆட்சி இருந்தால் நிறைய திட்டங்கள் கொண்டு வரலாம். அதற்கான ஆரம்ப கட்டம் தான் இந்த தேர்தல். திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் பாஜக எந்த தேர்தலையும் சந்திக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.