கிராம நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா இல்லாததால் வீட்டு வரி விதிக்க திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் மறுப்பதாக குற்றம்சாட்டி, நகராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு நகராட்சியின் கூட்டம், நகராட்சி தலைவர் மகேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை காலை நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. இதில், துணை தலைவர் பவுல் உட்பட 17 கவுன்சிலர்கள், ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நகராட்சி கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கிராம நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா இல்லாததால் வீட்டு வரி விதிக்க நகராட்சி நிர்வாகம் மறுப்பதாக குற்றம்சாட்டி, கூட்டத்துக்கு வந்த 17 கவுன்சிலர்களில் அதிமுக கவுன்சிலர்கள் 3 பேரை தவிர, மற்ற 14 கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து, நகராட்சி துனை தலைவர் பவுல் மற்றும் கவுன்சிலர்கள் தெரிவித்ததாவது: திருவேற்காடு நகராட்சி பகுதி களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கிராம நத்தம் நிலத்தில்தான் உள்ளன. ஆனால், இந்த வீடுகளுக்கு பட்டா இல்லாததால், வரி விதிக்க நகராட்சி நிர்வாகம் மறுக்கிறது. பட்டா தரவேண்டிய வருவாய்த் துறையோ, நகராட்சி வீட்டு வரி விதித்தால் மட்டுமே பட்டா வழங்குவோம் என்கிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து, நகராட்சி கூட்டத்தில் எடுத்துரைத்தும் பலனில்லை. எனவே, கிராம நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டு வரி விதிக்க மறுக்கும் திருவேற்காடு நகராட்சியை கண்டித்து, நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கிராம நத்தம் நிலம், மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்ட நிலங்களில் உள்ள வீடுகளுக்கு பட்டா இருந்தால் மட்டுமே நகராட்சி வரி விதிக்க முடியும்” என்றார்.