தமிழகம்

அறுவை சிகிச்சைக்கு பிறகு உறுப்பு தானம் செய்வோருக்கு 3 ஆண்டுக்கு உதவி தொகை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கு, சிறுநீரகதானம் வழங்க சிலர் முன்வந்தனர். ஆனால், அவர்கள் நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் அல்லஎன்பதால், சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனுமதி குழுவுக்கு, மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பிக்கவில்லை.

இதையடுத்து, சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க கோரி, தானம்பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது: நெருங்கிய உறவினர்கள் அல்லாதோர் உறுப்புகளை தானம்செய்ய இந்த சட்டத்தில் எந்ததடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், மாநில அளவிலான அனுமதி அளிக்கும் குழுவின்ஒப்புதல் பெற அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை, தானம் பெறுபவரும், வழங்குபவரும் இணைந்துகூட மாநில அளவிலான குழுவுக்கு விண்ணப்பிக்கலாம்.

உறுப்பு தானம் செய்வதில் வணிக ரீதியில் பரிவர்த்தனை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், தானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரும் விண்ணப்பத்தை மாநில குழு நிராகரிக்க கூடாது.மேலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க, உறுப்பு தானம் வழங்கியவருக்கு மருத்துவ காப்பீடு செய்வதுடன், 3 ஆண்டுகளுக்குமாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பின் அடிப்படையில் உறுப்பு தானம் வழங்குவது தொடர்பாக அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT