தமிழகம்

‘கரசேவைக்கு ஆதரவாக ஜெயலலிதா கருத்து ..!’ - ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வழியே ஒரு மீள்பார்வை

ஸ்ரீதர் சுவாமிநாதன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்றும் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்ட கரசேவையை ஆதரித்தார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்த கருத்து அதிமுகவை கொதிப்படையச் செய்திருக்கிறது. ‘அண்ணாமலையின் கருத்து ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி’ என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் ‘‘ ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கைஉண்டு; ஆனால், மத நம்பிக்கை கிடையாது’’ என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.

சசிகலாவின் நெருங்கிய உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் கூறுகையில், ‘‘ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை. இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984-ம் ஆண்டு ஜெயலலிதா எம்.பி.யாக இருந்தபோது காஷ்மீருக்கு 370-வது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு பாகிஸ்தானிலா கட்ட முடியும்; இங்குதான் கட்டமுடியும் என பேசி ஆதரவாக இருந்தார். ஜெயலலிதா தெய்வ பக்தி மிக்கவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்ற மதத்தையும் மதிப்பார்கள். ஜெயலலிதா தான் இந்து என்பதை அவரே சொல்லியுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

1991-ம் ஆண்டு முதல் முறையாக ஜெயலலிதா பதவியேற்றபோது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சக பொறுப்பை தன்னிடமே வைத்திருந்தார். 1992-ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக விழாவில் நேரடியாகச் சென்று கலந்து கொண்டு நீராடினார். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது கட்டாய மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். கோயில்களில் விலங்குகளை பலியிடுவதையும் தடை செய்தார். மேலும், 2003-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி ஜெயலலிதா அளித்த பேட்டியில், ‘‘அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கு கட்ட முடியும்’’ என்று கேள்வி எழுப்பியதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல, அதே பேட்டியில் நாடு முழுவதற்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதையும் ஆதரித்தார். ‘‘நாட்டுக்கு பொதுவான சிவில் சட்டம் அவசியமானது. நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கும்’’ என்றும் அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் அன்றைய காலகட்டத்தில் அப்போதைய ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வந்த ஜெயலலிதாவின் பேச்சு, பேட்டி,முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானியின் பேட்டி ஆகியவற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.

‘‘பாபர் மசூதி இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்கட்டும். 1528-ம் ஆண்டுக்கு முன் பிரச்சினைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததா என்ற ஆராய்ச்சி இப்போது தேவையில்லை. அது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிடக் கூடாது. அதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதே நேரத்தில், சிறுபான்மை மக்களைப் போல பெரும்பான்மை மக்களும் அவர்களதுஉரிமையை அமைதியாக அனுபவிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்தியுள்ள பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் விருப்பம்போல கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க வேண்டும். கரசேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும். சட்ட ரீதியாக முட்டுக்கட்டைகளை உடனடியாக அகற்ற மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பான்மையினரின் கருத்துக்களை புறக்கணிக்கக் கூடாது. பெரும்பான்மையினர் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.’’

(டெல்லியில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு, ‘தி இந்து’ 24-11-1992)

24-11-1992-ல் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தி

‘‘தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதாவின் பேச்சுக்குப் பிறகு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே பரஸ்பர நல்லெண்ணமும் இணக்கமும் நல்லுறவும் ஏற்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் எல்லா கட்சிகளும் பாஜகவை குற்றம்சாட்டிப் பேசிய நிலையில், ஜெயலலிதாவின் பேச்சு கூட்டத்தின் சூழலையே மாற்றிவிட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த ஜெயலலிதா என் வீட்டுக்கு வந்து சந்தித்துப் பேசினார். அதற்கு பிறகு நாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக எம்.பி.க்களுக்கிடையே சில பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது.

(சென்னையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேட்டி, ‘தி இந்து’ 22-3-1993)

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 1993-ல் ராமர் கோயில் கட்ட ஆதரவாக ராமஜென்ம பூமி நியாஸ் மஞ்ச் அமைப்பு சார்பில் தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கோயில் கட்டஆதரவாக 20 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. சென்னையில் நாரத கான சபாவில் நடைபெற்ற இதற்கான நிறைவு விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘டிசம்பர் 6-ம் தேதி சம்பவத்துக்கு (பாபர் மசூதி இடிப்பு சம்பவம்) பிறகு அயோத்தி பிரச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாகவும் ராமர் கோயில் இயக்கம் என்பது கோயில் கட்டுவதற்கான இயக்கமாக மட்டுமில்லாமல், ஜனநாயகத்தை காக்க போராடும் இந்துக்களின் இயக்கமாக மாறிவிட்டது’’ என்றார். (‘தி இந்து’ 22-3-1993)

‘‘அயோத்தி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். தற்போது இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தின் முன் இருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கக் கூடாது. பிரச்சினைக்குரிய இடத்தில் மசூதியை முஸ்லிம்களே விரும்பவில்லை என்று கேள்விப்பட்டேன்.’’ (ஜெயலலிதா பேட்டி ‘தி இந்து’ 3-3-2002)

SCROLL FOR NEXT