மதுரை: தென்காசியைச் சேர்ந்தஹஜ் முகமது, பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங்செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கும், புகார்தாரருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி பி.புகழேந்தி தனது உத்தரவில், “மனுதாரர் இன்னொருவர் மனைவியின் படத்தை மார்ஃபிங் செய்து, அவரை`கால்கேர்ள்' என அடையாளப்படுத்தி, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை அந்த தனிப்பட்ட பெண்ணுக்கு எதிரானகுற்றமாக மட்டும் கருதமுடியாது. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் எதிரான குற்றமாகும்.
மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்றம், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க வாய்ப்புள்ள குற்றமாக இருப்பதுடன், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றமாகவும் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.