சென்னை: முகப்பேரில் தெரு நாய் கடித்த இரண்டரை வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. சென்னை முகப்பேர் ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(31). இவரது மனைவி பிரதீபா(26). இவர்களுக்கு யாஷ்மிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.
கடந்த 27-ம் தேதி மாலை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த யாஷ்மிகாவை தெரு நாய் கடித்துள்ளது. படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தைக்கு, கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் டாக்டர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்நிலையில், நாய் கடித்தது பற்றி, குழந்தையின் பெற்றோர் சென்னை மாநகராட்சியிலும், காவல் துறையிலும் புகார் அளித்தனர்.