கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் இன்று (வெள்ளி கிழமை) காலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புத்திராம்பட்டி ஊராட்சியில் இயங்கிவந்த ஆழ்குழாய் கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்ததையடுத்து, ஊராட்சி நிர்வாகம் அந்த மின் மோட்டாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. இதற்காக மின் மோட்டாரை வெளியே எடுத்த போது இணைப்புக் கயிறு அறுந்து மோட்டார் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மாற்று ஆழ்குழாய் மூலம் குடிநீர் விநியோகித்து வந்தது. ஆனால், இரண்டு ஆழ்குழாய் கிணறு மூலாம் விநியோகம் செய்ய வேண்டிய தண்ணீரை ஒரு கிணறு மூலம் விநியோகம் செய்ததால் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தங்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்காத அப்பகுதி மக்கள் இன்று காலையில் சங்கராபுரம் சாலையில் அமர்ந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் எனவும், வேறு இடத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.