உதகை: ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு உதகையில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னைக்கு புறப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழக அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து கடந்த 25-ம் தேதி அவர் உதகை வந்தார்.
பின்னர் 28-ம் தேதி நடந்த மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்று, துணை வேந்தர்களுக்கு சான்றளித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு பாடத்திட்டத்தில் திராவிட இயக்க தலைவர்கள் வரலாறே நிறைந்துள்ளது. விடுதலைக்காக போராடிய தலைவர்களின் தியாக வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது” என்றார். ஆளுநரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஆளுநர் நேற்று கோடநாடு காட்சிமுனைக்கு செல்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஆளுநர் அந்தப் பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், தனது 5 நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று உதகையில் இருந்து ஆளுநர் சென்னைக்கு புறப்பட்டார்.
உதகை ராஜ்பவனில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா அவரை வழியனுப்பி வைத்தார். உதகையில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்கு சென்ற ஆளுநர் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் கோவை செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.