சென்னை: சென்னையில் உள்ள 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின் போது, கண்காணிப்புக்காக மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்களும், 41 தொலைக்காட்சிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் வாக்கு எண்ணும்மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளருக்கான முதல்கட்டபயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை ரிப்பன்மாளிகையில் நேற்று நடைபெற்றது. அப்போது வாக்கு எண்ணும் பணியின் வழிமுறைகள் அடங்கியகையேட்டை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வட சென்னையில் 357 நபர்கள்,தென் சென்னையில் 374 நபர்கள்,மத்திய சென்னையில் 380 நபர்கள்,322 அலுவலக உதவியாளர்கள் உட்பட மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது வடசென்னையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள், தென் சென்னையில் சோழிங்கநல்லூர் நீங்கலாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 30 மேஜைகள், மத்திய சென்னையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள் என மொத்தம் 268 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையில் 3 தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கீழ் 18 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ராணுவத்தினர் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 3 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இதர தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 26 என மொத்தம் 47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள் பாதுகாப்புப் பணிகளில் 1,384 பணியாளர்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வட சென்னையில் 280, தென் சென்னையில் 342, மத்திய சென்னையில் 300 என மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்களும், வட சென்னையில் 13, தென்சென்னையில் 13, மத்திய சென்னையில் 15 என மொத்தம் 41 தொலைக் காட்சிகள் பொருத் தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினிகுலுக்கல் முறையில் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி ஜூன்3-ம் தேதி காலை 8 மணிக்கும், இறுதியாக வாக்கு எண்ணும் மேஜை வாரியாக பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் கணினி குலுக்கல் முறையானது வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ம் தேதி காலை 5 மணியளவில் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களிலும் நடை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.