தமிழகம்

ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்தான்: தமிழக பாஜக திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்தான் என தமிழக பாஜக மீண்டும் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைவரையும்விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கு வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்ததுடன், அண்ணாமலைக்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் கருத்தை நாம் பெரிதாகஎடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வி.கே.சசிகலாவோ, ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது. இந்து மத நம்பிக்கை இருந்ததில்லை என கூறியுள்ளார்.

எனக்கு இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என யாரும் சொல்ல மாட்டார்கள். ஜெயலலிதா இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றியவர். சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக பெரும்பான்மை இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்ட தயங்காதவர்.

ராமர் கோயில், பொதுசிவில் சட்டம், மதமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜகவின் கருத்தையே ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். முதல்வர்கள் மாநாட்டிலும் அதை பதிவு செய்யஅவர் தயங்கியதில்லை. ஜெயலலிதாவால் தனது இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனது. அதற்காக அவர் இந்துத்துவ தலைவர் இல்லை என்றாகி விடுமா?

2011-ல் ஆட்சிக்கு வந்தஉடனேயே தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1-ம் தேதிக்குமாற்றினார். குஜராத் கலவரத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பொய்பிரச்சாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்ற விழாவுக்கு மூன்று முறை நேரில் சென்று வாழ்த்தினார்.

ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்பதால்தான் இந்துக்களின் எதிரியான திமுகவை கடைசிவரை ஜென்ம விரோதியாகவே பார்த்தவர். எனவே, அண்ணாமலை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

இந்துத்துவா வாழ்வியல் நெறி: இந்துத்துவா என்பதுஉலகம் முழுவதும் வரவேற்கப்படும் அற்புதமான வாழ்வியல் நெறிமுறை. சில மதப் பிரிவினைவாத தீய சக்திகள், இந்து தலைவர்கள் என்றால் ஏதோ மதவெறி பிடித்தவர்கள் போல வாக்கு அரசியலுக்காக செய்யும் தவறான பிரச்சாரத்துக்கு முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT