சென்னை: சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ.க்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், வேளச்சேரியில்இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமானப் பணிகள் 4.5 கி.மீ. தூரத்துக்கு முடிவடைந்துள்ளன. தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில் தூண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவந்தது.
இதற்கிடையே, 156 மற்றும் 157-வது தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டுஒரு பக்க இரும்பு சாரம் அகற்றப்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு, அந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பெரும் சப்தத்துடன் கீழே விழுந்து,3 அடி ஆழத்துக்கு சாலையில்புதைந்தது. இந்த மேம்பாலத்தை தாங்குவதற்காக தூணில் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டிருந்தது. இருந்தும் பாலம் சரிந்து உடைந்தது.
பாலம் விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய, ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து, அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கிடையில், சரிந்து உடைந்த பாலத்தை அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இந்த பாலத்தை பிரம்மாண்ட இயந்திரங்கள் வாயிலாக உடைத்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி தற்போது, முடிந்துள்ளது. இங்குசீரமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும், புதிய கர்டர் மூலமாக பாலம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஆதம்பாக்கத்தில் சரிந்த ரயில்வே பாலத்தின் பகுதி (கர்டர்) அகற்றப்பட்டுள்ளது. இங்கு சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.
இங்கு 3 மாதங்களில் புதிய கர்டர் நிறுவப்படும். தொடர்ந்து, மேம்பாலப்பணி நிறைவடையும். வேளச்சேரி - பரங்கிமலை வரையிலான வழித்தடத்தை 3 மாதங்களுக்குள் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.