விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திமுக உட்கட்சி மோதல் நடைபெற்று வரும் நிலையில், திண்டிவனத்தில் அமைச்சர் பொன்முடி பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. .
விழுப்புரம் மாவட்ட திமுகவுக்கு இரண்டு மாவட்டச் செயலாளர்கள் இருந்த நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரான விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி அண்மையில் காலமானார். அவருக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதனால், அமைச்சர் பொன்முடியே தெற்கு மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி வகிக்கிறார். வடக்கு மாவட்டத்தில் உள்ள பொன்முடி ஆதரவாளர்களுக்கும், மஸ்தான் ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். திண்டிவனம் நகர்மன்றத் தலைவர் நிர்மலா ரவிசந்திரன் மஸ்தான் ஆதரவாளராக இருப்பதால், நகர்மன்றத்தில் திமுக கவுன்சிலர்களான பொன்முடி ஆதவரவாளர்கள் வெளிநடப்பு செய்வது வழக்கம்.
இந்த நிலையில், அமைச்சர் மஸ்தானின் பிறந்த நாளுக்கு பேனர் வைப்பதில் விழுப்புரம் திமுகவில் ஏக குஸ்தி நடந்து வருகிறது. மே 31-ம் தேதி மஸ்தான் பிறந்தநாள். அதை விமர்சையாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கான பேனர்கள் வைப்பதில் பொன்முடி கோஷ்டியும் மஸ்தான் கோஷ்டியும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது.
அமைச்சர் பொன்முடி திமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ளதால் திமுக நிகழ்ச்சிகளில் அவரது பெயரை தவிர்க்க இயலாத நிலை உள்ளது. ஆனால், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் மஸ்தானிடம் நெருக்கத்தை உருவாக்கிக்கொள்ள பொன்முடி புகைப்படத்தை பேனர்களில் தவிர்ப்பதாக பொன்முடி ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா வைத்த பேனரை அமைச்சர் மஸ்தான் தரப்பினர் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதேபோல் கடந்த மார்ச் 31-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து அமைச்சர் பொன்முடி மைக்கை பறித்தது திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதி சந்திப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்முடி ஆதரவாளரான கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் தரப்பில் இரண்டு இடங்களில் மஸ்தான் புகைப்படத்தை சிறிய அளவிலும், அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை பெரிய அளவிலும் போட்டு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரை அகற்ற வேண்டும் என திண்டிவனம் போலீஸாருக்கு மஸ்தான் ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எவ்வித அனுமதியும், முன்னறிவிப்பும் இன்றி பேனர்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் எடுத்துவிட்டு இந்த பேனரை அகற்றட்டும் என்று பொன்முடி கோஷ்டி போலீஸிடம் மல்லுக்கட்டியது. பொன்முடியின் புகைப்படம் பேனரில் பெரிதாக இருப்பதால்தான் அவற்றை அகற்றச் சொல்கிறீர்கள் என்று ரேணுகா இளங்கோவன் தரப்பில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதனால், பேனரை அகற்றும் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு யாரோ சிலர் பொன்முடியின் புகைப்படம் இருந்த பேனரை கிழித்துள்ளனர். இத்தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸாரிடம் பொன்முடியின் ஆதரவாளர்கள் ரேணுகா இளங்கோவன் தலைமையில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொன்முடி ஆதரவாளர்கள் ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம் நகரம் முழுவதும் அதிகளவிலான பேனர்கள் வைப்பதென முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 31-ம் தேதி செஞ்சி மஸ்தானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கோஷ்டியினரும் போட்டிக்கு பேனர்களை வைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.