படங்கள்: செ.ஞானபிரகாஷ் 
தமிழகம்

இரண்டு முறை திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கே வராத புதுச்சேரி மேரி கட்டிடம்!

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இரண்டு முறை திறப்பு விழா கண்டும் இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மேரி கட்டிடம்.

புதுச்சேரியில் ரூ.15 கோடி மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் பிரதமர் மோடியால் 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்டது. புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கட்டிடம் உள்ளாட்சித் துறையிடம் முதல்வர் ரங்கசாமியால் ஒப்படைக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த மேரி கட்டிடம் மிக பழமையான கட்டிடமாக இருந்தது. பாரம்பரிய பிரெஞ்சு கட்டிடப்பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து, புதுவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த மேரி கட்டிடத்தை, அதே இடத்தில் பழமை மாறாமல் மீண்டும் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இருந்த பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.14.83 கோடியில் மேரி கட்டிடத்தின் கட்டுமானப்பணி தொடங்கியது. சுமார் 690 சதுர மீட்டரில் பிரதான கட்டிடம், தரைத்தளம், முதல் தளம், கருத்தரங்க கூடம், திருமண பதிவு அறை உள்ளிட்டவை பாரம்பரிய பழைய கட்டிடப்பாணியில் கட்டப்பட்டன. இந்த திட்டம் 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2021 பிப்ரவரியில் இக்கட்டிடத்தை திறக்க அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. ஆனால், அழைப்பிதழில் அப்போதைய ஆளுநர் கிரண்பேடி பெயர் இல்லை. இதனால் இவ்விழாவை தள்ளிவைக்க கிரண்பேடி உத்தரவிட்டார். மத்திய அரசால் நிதி தரப்பட்ட திட்டங்கள், பணிகளை திறக்க மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டது.

இச்சூழலில் எம்எல்ஏ-க்கள் ஆதரவை திரும்ப பெற்றதால் பெரும்பான்மை இல்லாதததால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதையடுத்து மேரி கட்டிடத்தை கடந்த 2021 பிப்ரவரி 25-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்து வைத்து மூன்று ஆண்டுகளாகியும் இந்தக் கட்டிடத்துக்கு இன்னும் எந்த அலுவலகமும் வரவில்லை. ஆளுநர் மாளிகை பழுதடைந்து சீர் செய்யப்படவேண்டிய நிலையிலிருப்பதால் மேரி கட்டிடத்தை ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

அதேபோல், இந்தக் கட்டிடத்தில் முன்பு செயல்பட்ட உள்ளாட்சித் துறையும், சுற்றுலாத்துறையும் மேரி கட்டிடத்தை கேட்டு வந்தனர். இதனால் இந்த அலுவலகம் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ரங்கசாமி, உள்ளாட்சித் துறையிடம் இந்தக் கட்டிடத்தை ஒப்படைத்து சுற்றி பார்த்தார். அதன் பிறகும் நகராட்சி இங்கு மாற்றப்படவில்லை.

இ துபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''பிரதமர், முதல்வர் என 2 முறை திறப்பு விழா நடந்தும் நகராட்சியிடம் புதுவை மேரி கட்டிடம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. இதனால் மேரி கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே பழமையாகி வருகிறது. ஆளுநரும், முதல்வரும் தான் இதைக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

SCROLL FOR NEXT