டிபிஐ அலுவலகம் - சென்னை. 
தமிழகம்

தேங்கும் அலுவலக கோப்புகள் பராமரிப்பு: தமிழக பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

சி.பிரதாப்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதால், முடிவுற்ற கோப்புகளை அழிப்பது; முக்கிய கோப்புகளை பராமரிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் பதிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், முடிவுற்ற கோப்புகளை உரிய காலக்கெடுவுக்குப் பின் அழிக்காமலும் கோப்புகள் தேங்கிய நிலை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் முறையான அலுவலக நிர்வாகத்தினை செயல்படுத்திட ஏதுவாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

பதிவறையில் உள்ள பதிவுருக்கள் அவற்றுக்கான காலக்கெடு நிறைவடைந்தவுடன் அலுவலகத் தலைவரின் உரிய அனுமதி பெற்று காலம் தாழ்த்தாமல் அழிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட கோப்புகளைத் தவிர்த்து பிற கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என அலுவலக கண்காணிப்பாளர் உரிய சான்றளிக்க வேண்டும். இந்த சான்று "எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்புகள், முக்கிய அரசாணை வழங்கப்பட்ட கோப்புகள், நியமன கோப்புகள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கை தேவைப்படும் அனைத்து கோப்புகளையும் அழிக்காமல் முறையாக பாதுகாக்க வேண்டும். இத்தகைய கோப்புகளை மின்னணு முறையில் நிரந்தர ஆவணமாக பராமரிப்பது அவசியம்.

தமிழக அரசு அலுவலக நடைமுறைகளின்படி அவ்வப்போது முடிவுற்ற பதிவுருக்களை முறையாக கழிவகற்றம் செய்து நல்ல முறையில் அலுவலகத்தினை பராமரிக்க வேண்டும். கழிவுத்தாள்களை அகற்றுவதற்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும். கழிவுத்தாள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் பெறப்படும் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT