மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக, மதுரை அமலாக்கத் துறை அதிகாரிஅங்கித் திவாரியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர் தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து, அங்கித் திவாரி மார்ச் 25-ம் தேதி முதல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, கையெழுத்திட்டு வருகிறார். ஜாமீன்நிபந்தனைகளை தளர்த்தக் கோரிதிண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனை தளர்வு கோரி அங்கித் திவாரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், வயதான பெற்றோரை கவனிக்க வேண்டியுள்ளது. தினமும் கையெழுத்திட திண்டுக்கல் நீதிமன்றம் செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தினமும் நேரில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும்என்ற நிபந்தனையை தளர்த்துமாறு கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அங்கித் திவாரி வாரம் ஒரு நாள் நீதிமன்றத்தில்ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார்.