சென்னை: திருவள்ளுவர் திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி என்ற பெயரில் மூடி கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உலகப் பொதுமறை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் தமிழர்களால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று (மே 24) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு திருவள்ளுவர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இவ்விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், மயிலாப்பூரில் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வள்ளுவர் சிலை பராமரிப்பு பணி என்ற பெயரில் மூடி கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிலை அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி வார்டு பொறியாளரிடம் கேட்டபோது, ``இந்த சிலையை சீரமைக்கும் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. கடந்த ஏப்ரலில் பணிகள் முடிந்தன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் சிலை திறக்க முடியவில்லை. ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.