சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழைக்கு இதுவரை 12 பேர் உயரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்துக்கு 12.5 செமீ மழை இயல்பாக கிடைக்கும். இந்நிலையில், மார்ச் 1 முதல் மே.21 வரையில் 11.47 செமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.3 செமீ குறைவாகும். கடந்த 24 மணிநேரத்தில் ராணிப்பேட்டையில் இடி, மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மே 16 முதல் 21-ம் தேதி வரை கனமழை காரணமாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மழைக்கு 19 கால்நடைகள் இறந்துள்ளதுடன், 55 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், மே. 24-ம் தேி வரை பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தமிழக கடற்கரை, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளில் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி மொபைல் போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.