மதுரை: ‘எத்தகைய விளைவுகள் என்றாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்’ என்று ஓபிஎஸ் அணிக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்திருக்கிறார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியின் சார்பில் குறிஞ்சி நகரில் எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திறந்து வைத்த பாலத்தில் கூட பழுது ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அதே போல மக்களுக்கு போதிய விழிப்புணர்வையும் வழங்க வேண்டும்.
ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான், என்னை கே.பழனிசாமியின் அடியாள் என்றும், எனக்கு வரலாறு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எனது தந்தை கிளைச் செயலாளராக இருந்துள்ளார். நான் சட்டக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது எனக்கு ஜெயலலிதா மாணவரணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், ஜெ.பேரவை என்று பல்வேறு பதவிகளை வழங்கி உள்ளார். தொடர்ந்து இரண்டு முறை அமைச்சராக பணியாற்றி உள்ளேன். அதனைத் தொடர்ந்து மாவட்ட கழகச் செயலாளர், தேர்தல் பணிக்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வெற்றியைப் பெற்று தந்துள்ளேன். தற்பொழுது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்று இந்த இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்துள்ளேன்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனியில் வெற்றி பெற்று தந்துள்ளேன். ஆனால், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சையதுகான் யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்துள்ளார். அதில் நான் கே.பழனிசாமியின் அடியாள் என்றும், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். என்ன விளைவுகளை நீங்கள் கொடுத்தாலும் அதை நான் சந்திக்க தயாராக உள்ளேன். இதே மு.க.அழகிரி மதுரையில் இருந்த பொழுது கிராமம் கிராமமாக சென்று இளைஞர் பாசறையை உருவாக்கினேன். எந்த மிரட்டல் உருட்டலுக்கு அஞ்ச மாட்டேன். ஓபிஎஸ் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவை மீட்க என் உயிரை கொடுக்கக்கூட தயாராக உள்ளேன். இதே சையதுகான் என்னிடம் பல கோரிக்கை வைத்தார். அதை நான் எடப்பாடியாருக்கு தெரிவித்தேன். நாகரிகம் கருதி அதை நான் இங்கு வெளியே சொல்லவில்லை. தொடர்ந்து பேசினால் உங்கள் தகுதி என்னவென்று என்னால் பேச முடியும். உங்கள் பல உளறல் பேச்சுகளை என்னால் வெளியே சொல்ல முடியும். இன்றைக்கு இவர்களைப் போன்ற சுயநலவாதிகளிடம் இருந்து கட்சியை காப்பாற்றவும், அதேபோல் திமுகவிடம் இருந்து மக்களை காக்கவும் அதிமுக செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.