தமிழகம்

சர்வோதய சங்கங்களுக்கு வழங்கும் தள்ளுபடி மானியம் ரூ.15 கோடியாக உயர்வு: அமைச்சர் டி.பி.பூனாட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

‘‘சர்வோதய சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை, ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தி வழங்கப் படும்’’ என்று பேரவை யில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள் கிழமை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசியதாவது:

சர்வோதய சங்கங்களில் உற்பத்தியில் ஈடுபடும் நூற்போர், நெய்வோர், முறுக்கேற்றுபவர், சாயமிடுபவர்கள் மேலும் பயன்பெற, சர்வோதய சங்கங்க ளுக்கு கதர் உற்பத்தியின் மீது வழங்கப்படும் தள்ளுபடி மானிய உச்சவரம்பு ரூ.10 கோடியை 2014-15-ம் ஆண்டில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

திருச்சி அருகே சமயபுரத்தில் இயங்கி வரும் குளியல் சோப்பு தயாரிக்கும் பிரிவில், புதிய கட்டிடம் கட்டி தானியங்கி குளியல் சோப்பு இயந்திரம் நிறுவ ரூ.2.50 கோடி வழங்கப்படும். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தச்சு மற்றும் கொல்லு அலகு ரூ.65 லட்சத்தில் நவீனப்படுத்தப்படும். அம்பத்தூர் காலணி அலகின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி தொழிலாளர்கள் அதிக வேலை வாய்ப்பு பெறவும், நல்ல தரமான காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்க, நவீன இயந்திரங் கள் ரூ.1.50 கோடியில் நிறுவப் படும்.

தொழில்கூட்டுறவு சங்கங் களின் வளர்ச்சிக்கும், அவற்றை புனரமைக்கவும் 6 தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வழங்கப்படும். நெசவு உற்பத்தியை அதிகரித்து, நெசவாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த ரூ.30 லட்சத்தில் அச்சு, விழுது, ஜக்கார்டு, நாடா, தார் சுற்றும் இயந்திரம் போன்ற உபகரணங்கள் நெசவாளர்களுக்கு வழங்கப் படும்.

கடலூர் மண் பாண்ட தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் விருத்தாசலத்தில் செயல்படும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் பீங்கான் கலைக்கூடத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய சூளை நிறுவப்படும்.

இவ்வாறு அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசினார்.

SCROLL FOR NEXT