சென்னை: தன்னைப்போல் யாரும் மதுவுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக, மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என முதல்வரை சந்தித்து வலியுறுத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். முதல்வர் என்பதால் அவரது வீடு மற்றும் சுற்றிஇருக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே முதல்வர் வீட்டுக்குசெல்ல முடியும். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் இளைஞர் ஒருவர், போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் முதல்வர் வீடு நோக்கி சென்றார்.
அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் சாலை சந்திப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், அந்த இருசக்கர வாகனத்தில் செல்வது போலீஸ் என நினைத்து அவரை மறித்து சோதிக்காமல் விட்டு விட்டனர்.
ஆனால், முதல்வர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த, முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீஸார், அங்கு வந்த இளைஞரை மறித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, அவரை பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், மதுபோதைக்கு நான் அடிமையாகி விட்ட நிலையில், மேலும் என்னைப்போல் வேறு யாரும் அடிமையாகி விடக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில்வலியுறுத்த சென்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ஓட்டி வந்த வாகனம் ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் அருண் என்பவருக்கு சொந்தமானது எனவும், சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த சந்தோஷ் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருவதாகவும், அவர் ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் தண்ணீர் கேன் போடுவதாகவும், ஓட்டல் சென்று உணவு வாங்கி வருவதாக தெரிவித்து காவலர் அருணின் இருசக்கரவாகனத்தை வாங்கிக் கொண்டு அந்த வாகனத்தில் முதல்வர் வீடு நோக்கி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட சந்தோஷ் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.