தமிழகம்

காரை நிறுத்தி பூசாரியிடம் மனு பெற்றார் முதல்வர்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா, காரை நிறுத்தி அங்கு நின்றிருந்த பூசாரி யிடம் கோரிக்கை மனுவைப் பெற்றார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. கூட்டம் முடிந்து பேரவையில் இருந்து வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா காரில் ஏறி புறப்பட்டார். அவரை அமைச்சர் கள், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்தி வழியனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாகனங்கள் வெளியேறும் வாயில் அருகே தாம்பூல தட்டில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுவுடன், அப்பகுதியில் உள்ள நாக தேவதை அம்மன் ஆலய பூசாரி வரதராஜன் நின்றுகொண்டி ருந்தார்.

இதை பார்த்த முதல்வர் ஜெயலலிதா காரை நிறுத்தி, பூசாரியை அருகில் அழைத்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு சென்றார்.

இது குறித்து பூசாரி வரதராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இக்கோயில் சட்டப் பேரவையை ஒட்டியவாறு அமைந்துள்ளது. இதில் அதிக அளவில் தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் ஊழியர் கள்தான் வழிபட்டு செல் கின்றனர். சக்தி வாய்ந்த இந்த கோயிலை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளேன்.

மேலும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 5-வது வெள்ளிக்கிழமை கூழ் வார்க்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெறும் கூழ் வார்க்கும் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுமாறு முதல்வர் அறிவுறுத்தினார் என்றார் அவர்.

SCROLL FOR NEXT