உதகை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் இன்று (சனிக்கிழமை) மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் இறுதி வரை மழை பெய்யாததால், நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு வருகிறது.
உதகை மற்றும் கல்லட்டி, கட்டபெட்டு, கூக்கல்தொரை, கோத்தகிரி, கோடநாடு ஆகிய புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கூக்கல் தொரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மின் உற்பத்தி நிலையங்களான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, நடுவட்டம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் நீலகிரிக்கு வர மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
இன்று காலையில் ரயில்வே அதிகாரிகள் மலை ரயில் வழித்தடத்தில் பாறைகள் விழுந்து கிடந்ததை பார்த்தனர். பாறைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்ததால் மலை ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இன்றைய பயணத்துக்காக முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்ப அளிக்கப்பட்டது.